புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

புதிய அரசியலமைப்பு ஜே.ஆரினதை விட மோசமாக இருக்கப் போகிறது!

மாகாண சபைகளை கலைக்க அல்லது அவற்றின் அதிகாரங்களை மீளப்பெற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இணக்கம் தெரிவித்திருக்கிறது என அரசியலமைப்புச் சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் ஐக்கியம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் நாட்டின் சுதந்திரம் என்பனவற்றுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு மாகாண சபையையும் கலைப்பதற்கோ அல்லது அதனது அதிகாரங்களை மீளப் பெறுவதற்கோ மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் யோசனையொன்றை புதிய அரசியல் அமைப்பில் உள்ளடக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் அமைப்பில் இம்மாதிரியான ஏற்பாடு இல்லையெனச் சுட்டிக்காட்டிய விக்கிரமரத்ன, இந்த யோசனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வரவேற்றிருப்பதாகக் கூறியுள்ளார்.

jayampathy-wikramaratna-720x480-720x480ஜயம்பதி விக்கிரமரத்ன

ஜயம்பதி விக்கிரமரத்ன அரசியல் அமைப்பு சம்பந்தமான விவகாரங்களில் நிபுணத்துவம் உள்ளவர் எனப் பலராலும் கருதப்படுபவர். மகிந்த ஆட்சிக் காலத்து சர்வகட்சிக் கலந்தாலோசனைக் கூட்டங்களில் சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்காக வாதாடியவர்.

நீண்டகாலமாக லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமைப் பதவியில் அங்கம் வகித்த அவர், கடந்த பொதுத் தேர்தலின் போது தனது இடதுசாரிக் கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, படு பிற்போக்கான ஏகாதிபத்திய சார்பு வலதுசாரிக் கட்சியான ஐ.தே.க. மூலம் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அதன் பின்னர் ‘பன்றியோடு சேர்ந்த பசுக்கன்றும் என்னவோ செய்யும்’ என்பது போல விக்கிரமரத்னவின் போக்கும் ஐ.தே.கவின் வலதுசாரி – இனவாதக் கொள்கைகளின் பக்கம் சாயத் தொடங்கியது.

இப்பொழுது அவரே அதிகாரப் பகிர்வுக்கு எதிரான கருத்துக்களை ஐ.தே.க. சார்பாகப் பேச ஆரம்பித்துவிட்டார். ?

அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை.

இனம் இனத்தையே நாடும். ஆனால் ‘தமிழ் மக்களுக்காக அதைச் செய்வோம், இதைச் செய்வோம்’ என வாய்ச்சவடால் அடித்த சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து என்ன சொல்லப் போகின்றனர்? என்ன செய்யப் போகின்றனர்

ranil maithiri 88f
ஏனெனில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் நிபந்தனை ஏதும் இன்றி மைத்திரி – ரணில் கூட்டை ஆதரித்து அவர்களை கூட்டமைப்பினர் வெற்றிபெற வைத்தனர்.

கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் வாக்குகளை இந்த வலதுசாரிக் கும்பலுக்கு கொள்ளையடித்துக் கொடுக்காவிட்டால் மைத்திரி – ரணில் கோஸ்டி ஒருபோதும் அதிகாரத்துக்கு வந்திருக்க முடியாது.

தேர்தல் நேரத்தில் இனப் பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக ‘நல்லாட்சி’ தலைவர்களுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்தால் நல்லது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும், கூட்டமைப்பின் சில பங்காளிக் கட்சிகளும் வலியுறுத்தியபோது, சம்பந்தன் தனக்கு மைத்திரி, ரணில், சந்திரிக ஆகியோர் மீது பூரண நம்பிக்கை இருப்பதால் ஒப்பந்தம் தேவையில்லை என நிராகரித்துவிட்டதாக இப்பொழுது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமாத்திரமின்றி, இனப்பிரச்சினைக்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு கிடைக்கும் என்றும் சம்பந்தன் திரும்பத் திரும்பக் கூறி வந்தார்.

ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் இரண்டும் இனப் பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி ஒருபோதும் வழங்கப்படமாட்டாது என்றும், அதேபோல வடக்கு கிழக்கும் இணைக்கப்படமாட்டாது என்றும் தெளிவாகக் கூறிவிட்டன.

அதுமட்டுமின்றி, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கை இணைத்து வைத்த இந்திய அரசாங்கத்தின் தற்போதைய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இரு மாகாணங்களின் இணைப்பை இந்தியா இனிமேலும் வலியுறுத்தாது என கூட்டமைப்புத் தலைவர்களிடம் நேரடியாகவே கூறி விட்டார்.

இந்தச் சூழ்நிலையில்தான், மாகாணசபைகளைக் கலைக்கும் அல்லது அதிகாரங்களை மீளப்பெறும் அதிகாரம் மத்திய அரசுக்கு புதிய அரசியல் அமைப்பின மூலம் வழங்கப்படும் என ஜயம்பதி விக்கிரமரத்ன புதிய குண்டொன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.

images-53அது மட்டுமின்றி, இந்த ஏற்பாடு ஜே.ஆர.ஜெயவர்த்தன கொண்டு வந்த 1978 அரசியல் அமைப்பில் இல்லையென்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

அப்படிப் பார்த்தால் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பு ஜே.ஆரின் அரசியல் அமைப்பையும் விட மோசமாக இருக்கப் போகிறது என்பதே அதன் அர்த்தம்.

இந்த நிலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என்ன செய்யப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடமும், தமிழ் தேசியவாதிகளிடமும் எழுவது இயல்பானதே. ஆனால் அவர்கள் செய்வதற்கு எதுவும் இல்லை என்பதை ஏற்கெனவே எடுத்துக்காட்டிவிட்டனர்.

அவர்கள் தமது நிலையிலிருந்து ஏற்கெனவே படிப்படியாக விலக ஆரம்பித்துவிட்டனர். அதை அவர்கள் தெரிந்து கொண்டு செய்தபோதிலும், வழமைபோல மக்களுக்கு இன்னொரு படத்தைக் காட்டிக்கொண்டு இருக்கின்றனர்.

அரசாங்கம் சமஸ்டி தர முடியாது என்றபொழுது கூட்டமைப்பினர் அதை ஏற்றுக்கொண்டனர். பின்னர் வடக்கு கிழக்கை இணைக்க முடியாது என்றபொழுது அதையும் ஏற்றுக் கொண்டனர்.

இப்பொழுது மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரம் புதிய அரசியல் அமைப்பில் இடம்பெறப் போகிறது என்று தெரிவித்த ஜயம்பதி விக்கிரமரத்ன, அதை கூட்டமைப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

கூட்டமைப்பினர் அவரது கூற்றை இதுவரை மறுக்காததில் இருந்தே கூட்டமைப்பினரும் அதற்குச் சம்மதம் என்பது நிரூபணமாகிறது.

அதாவது வட்டுக்கோட்டைத் தீரமானத்தில் எடுத்த தனிநாடு போய், அதன் பின்னர் சமஸ்டி போய், அதன் பின்னர் வடக்கு கிழக்கு இணைப்பு போய், இப்பொழுது மாகாண சபைகள் கூட சுயாதீனமாக இயங்க முடியாத தடை போடப்பட போகிறது.

இந்த நிலைமையில் தமிழ் தலைமைகள் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்து வரும் நாசகார வேலைகளைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.

1957இல் இனப் பிரச்சினைக்கு தீர்வாக பண்டா – செல்வா ஒப்பந்தம் ஏற்பட்ட பொழுது அதை முறியடிக்க ஐ.தே.க. நாட்டில் குழப்பங்களை உருவாக்கியது.

அந்த நேரத்தில் பண்டாரநாயக்கவின் கரங்களைப் பலப்படுத்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தமிழரசுக் கட்சியினர் அநாவசியமான முறையில் சிங்கள சிறீ எதிர்ப்புப் போராடத்தை உருவாக்கி, சிங்கள இனவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தி பண்டாரநாயக்கவை கையறு நிலைக்குத் தள்ளி, அவர் வேறு வழியில்லாமல் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைத்தனர்.

IMG1987இல் இனப் பிரச்சினைத் தீர்வாக இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை முறைத் தீரவை முன்வைத்த போது, அ.அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை அதை ஆதரித்தாலும், அவரைப் புலிகள் கொலை செய்த பின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் புலிகளின் அதிகார வேட்கைக்கு அடிபணிந்து, அந்த ஒப்பந்தத்தை சிங்கள இனவாதிகளுடன் இணைந்து எதிர்த்தனர்.

அதேபோல 2000ஆம் ஆண்டில் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த பொழுது, ஒற்றையாட்சி முறையை மாற்றி இலங்கையை ஓரளவு சமஸ்டி முறையை ஒத்த ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என மாற்றுவதற்கு எனக் கொண்டுவரப்பட்ட தீர்வுப் பொதியை தமிழ்த் தலைமை ஐ.தே.க, ஜே.வி.பி., ஹெல உருமய போன்ற சிங்கள இனவாத சக்திகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்த விடாமல் முறியடித்தது.

அந்தத் தீர்வுப் பொதியில் இரண்டு மிக முக்கியமான சரத்துகள் உள்ளடங்கி இருந்தன.

ஒன்று, பிராந்திய சபைகளின் அங்கீகாரம் இன்றி அச்சபைகளை மத்திய அரசு தன்னிச்சையாகக் கலைக்க முடியாது என்பது.

இரண்டாவது, இப்பொழுது சாதாரண நாடாளுமன்றப் பெரும்பான்மையின் மூலம் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள, எந்த நேரமும் இல்லாதொழிக்கக்கூடிய பிரஜாவுரிமையை மாற்ற முடியாதவாறு சட்டத்திலேயே உறுதிப்பாடு வழங்குவது.

சிறுபான்மை இனங்களுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய இந்த இரண்டு விடயங்களையும் உள்ளடக்கிய அந்தத் தீர்வுப் பொதியைத்தான் இன்றைய கூட்டமைப்பு சம்பந்தனும் அங்கம் வகித்த அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமை சிங்கள இனவாத சக்திகளுடன் சேர்ந்து நடைமுறைப்படுத்த விடாமல் செய்தது.

தொடர்ச்சியாக தமிழ் மக்களின் வாழ்க்கையுடன் தமது சுயலாபம் கருதி விசமத்தனமான விளையாட்டில் ஈடுபட்டுள்ள இந்த தமிழ்த் தலைமைகள்தான், தமிழ் மக்களுக்கு விமோசனம் பெற்றுத் தரப்போவதாகத் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன.

இன்றைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையை நிச்சயமாகத் தீர்த்து வைக்கும் என அடித்துக்கூறிய சம்பந்தன், “அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிக்கிறது” என இப்பொழுது சுருதியை மாற்றிக் கூறத் தொடங்கியிருக்கிறார்.

இப்படியே அவர்கள் இன்னும் பல தலைமுறைகளுக்கு தமிழ் மக்களை ஏமாற்றி தமது அரசியல் பிழைப்பை நடாத்தப் போகிறார்கள்.

இந்த நிலைமையில் இனியாவது தமிழ் மக்களில் ஒரு 10 சத வீதத்தினர் தன்னும் தமது பட்டறிவைக் கொண்டு வருங்காலத்தில் ஆழமாகச் சிந்தித்து செயல்படுவார்களா என்பதுதான் இன்றுள்ள கேள்வி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *